அறுந்த மின் கம்பியில் சிக்கி 5 பசுக்கள் பலி

சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், இடையன்பால்சொரி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது நான்கு பசு மாடுகளும், அன்பழகன் என்பவருக்கு சொந்தமான இரு பசு மாடுகளும் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது, மதுராந்தகநல்லுார் துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நத்தம் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி, ஐந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. படுகாயமடைந்த ஒரு பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையின் போது, மின் கம்பி அறுந்து விழுந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் ஒரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதுபோல, அரியலுார் மாவட்டம், துாத்துார் அருகே சிலுப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாயி, 60. நேற்று காலையில், இவருடைய நான்கு பசு மாடுகளை மேய்ச் சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் தேடிய போது, கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, உயிரிழந்து கிடந்தார். மேலும், அவர் ஓட்டிச் சென்ற மாடுகளில் மூன்று மாடுகள் உயிரிழந்த நிலையில், ஒரு மாடு மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement