அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை; தி.க.,வினர் எதிர்ப்பால் அகற்றம்

99

போச்சம்பள்ளி : மத்துார் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சுவாமி சிலை, தி.க.,வினர் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரஸ்வதி சுவாமியின் சிலை வைக்க கடந்த, இரு மாதங்களுக்கு முன், நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். குழு உறுப்பினர்கள் 24 பேரின் நன்கொடையில், பள்ளி வளாகத்தில் கடந்த, 15 நாட்களாக பீடம் அமைத்து, அதில் சரஸ்வதி சுவாமி சிலையை வைத்து, கட்டுமான பணி நடந்தது. இந்நிலையில், தி.க.,வை சேர்ந்த சிலர், பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாளிடம், 'பள்ளி வளாகம் பொதுவானது. அதில் ஹிந்து கடவுள் சரஸ்வதியின் சிலை வைப்பது நியாயமா' என கேள்வி எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் அவரை தொடர்பு கொண்ட, கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், எவ்வித அனுமதியுமின்றி சிலை வைப்பதை ஏற்க முடியாது எனக் கூறி சிலையை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொக்லைன் கொண்டு சரஸ்வதி சிலை உடைத்து அகற்றப்பட்டது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் பெருமாளிடம் கேட்டதற்கு, ''பள்ளி மேலாண்மை குழு முடிவு செய்து, அவர்கள் சிலை அமைக்க கட்டுமான பணி செய்தனர். இது சம்மந்தமாக, தி.க.,வினர், அரசு பள்ளி பொதுவானது. இதில், சரஸ்வதி சுவாமி சிலை அமைக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, சி.இ.ஓ.,விடம் புகார் அளித்ததால், அவரது உத்தரவு படி சிலை அகற்றப்பட்டது,'' என்றார்.


மாவட்ட சி.இ.ஓ., முனிராஜிடம் கேட்டதற்கு, ''பள்ளி வளாகத்தில் புதிய சிலைகள் அமைக்க அனுமதி இல்லை. மேலும், மத்துார் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. சிலையை இரவோடு இரவாக மேலாண்மை குழு உறுப்பினர்கள் வைத்துள்ளனர். தி.க.,வினருடைய புகார் எதுவும் தனக்கு வரவில்லை. மேலும், மதசார்புடைய சிலைகள் பள்ளி வளாகத்தில் வைக்கக்கூடாது என்பது விதி. அதனால் அதை அகற்ற உத்தரவிடப்பட்டது,'' என்றார்.

Advertisement