நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன

23

புதுடில்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.


நம் நாட்டில் இருந்தபடியே சிலர், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, உளவு வேலையில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிரான தேடுதல் வேட்டையை, நம் புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளன.


பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், பஞ்சாபில் மட்டும் இரு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ல், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பலாக்ஷர் மாசிஹ், சூரஜ் மாசிஹ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து,  11ல், மலேர்கோட்லா மாவட்டத்தைச் சேர்ந்த குசாலா, யாமீன் முகமது ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 15ல், சுக்ப்ரீத் சிங், கரன்பிர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


ஹரியானாவில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ல், சோனிபட் மாவட்டத்தில், உ.பி.,யின் கைரானாவைச் சேர்ந்த நவுமன் இலாஹி, 24, என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.அடுத்த நாளே, கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் தேவேந்தர் சிங், 25, கைது செய்யப்பட்டார். சமீபத்தில், 'யு டியூபர்' ஜோதி மல்ஹோத்ராவையும் போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, நுாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.


இதே போல், உ.பி.,யின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சட்டம் என்ன சொல்கிறது



அலுவலக ரகசிய சட்டங்களின் படி, வேறு நாட்டிற்காக உளவு பார்ப்பது பெரிய குற்றம். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குற்றத்தின் தன்மை அடிப்படையில் கடுமையான அபராதத்துடன், 3 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அலுவலக ரகசிய சட்டம்



உளவு பார்ப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாதுகாப்பதற்கும், அலுவலக ரகசிய சட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதை தடுப்பதற்காக முக்கிய தகவல்கள் கசிவதை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி, உளவு பார்ப்பது, முக்கியமான அரசு தகவல்களை அனுமதியின்றி பகிர்வது, நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான தகவலகளை வைத்து இருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டதுடன், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு இது பொருந்தும் எனக் கூறப்பட்டது.

சட்டப்பிரிவு 3



அலுவலக ரகசிய சட்டப்பிரிவு 3ன்படி, கீழ்கண்டவை குற்றச்செயல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

*நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், ராணுவ தளம் மற்றும் சொத்துகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இடங்களை அணுகுதல் , ஆய்வு செய்தல் அல்லது உள்ளே நுழைதல்

*எதிரிகள் நேரடியாக அல்லது மறைமுகமாக பயன்பெறும் வகையில் குறிப்பு எழுதுதல், திட்டங்கள் தீட்டுதல், வரைபடங்கள் தயாரித்தல்

*நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிரிகள் பயன்பெறும் வகையிலான ஆவணங்கள், கடவுச்சொல்கள், அலுவலக ரகசிய குறியீடுகள சேகரித்தல், பாதுகாத்தல்

தண்டனை

பாதுகாப்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள் அல்லது ராணுவ விஷயங்கள் தொடர்பான குற்றங்களாக இருந்தால், 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். மற்ற வழக்குகளில் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

சட்டப்பிரிவு 5



இந்த பிரிவின்படி,

*அனுமதி இல்லாத நபர்களிடம் ரகசிய அலுவலக தகவல்களை பகிர்வது

*நாட்டின் இறையாண்மை பாதிக்கும் வகையிலும், வெளிநாட்டு சக்திகள் பயன்பெறும் வகையிலும் இந்த தகவல்களை பயன்படுத்துவது

*அனுமதி இல்லாமல் அலுவலக ஆவணங்கள் அல்லது தகவல்களை பெறுவது

*சட்டத்தை மீறி தெரிந்தே தகவல்களை பெறுவோர்களும் இச்சட்டத்தின்படி குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தண்டனை


இச்சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

பிஎன்எஸ் 152வது பிரிவு



இந்த பிரிவானது வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ அடையாளங்கள், வார்த்தைகள், மின்னணு தகவல் பரிமாற்றம், நிதி வழிமுறைகள் அல்லது வேறு வகைகளில், பிரிவினை, ஆயுதமேந்தி கிளர்ச்சி அல்லது நாசவேலை நடவடிக்கைகளைத் தூண்டும் அல்லது தூண்ட முயற்சிக்கும் நபர்களை குறிக்கிறது. நாட்டின் இறையாணமை ஒற்றுமை அல்லது ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் இந்த பிரிவின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.


தண்டனை


இச்சட்டத்தின் கீழ் அபராதத்துடன் ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement