அரிசி கடத்தல்: 4 மாதத்தில் 3,232 பேர் கைது

சென்னை:சட்டவிரோதமாக, ரேஷன் அரிசி, காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் கடத்தியதாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 3,232 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, குடிமைப் பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு, ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, கன்னியாகுமரி, கோயமுத்துார், வேலுார், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவள்ளூர், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில், அண்டை மாநில எல்லைகளில், எட்டு சிறப்பு ரோந்து குழுவினர், வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுதும் சட்ட விரோதமாக, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டில், ஜனவரி முதல் ஏப்., 30ம் தேதி வரையிலான நான்கு மாதத்தில், 3,232 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில், 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



கடத்தலும் கைதும்




( ஜன., 1 - ஏப்., 30 வரை)பொருட்கள் பறிமுதல்


ரேஷன் அரிசி 13,57,593 கிலோ


மண்ணெண்ணெய் 9,935 லிட்டர்


காஸ் சிலிண்டர் 1,062


வாகனம் 788


கைது குண்டாஸ்3,232 45

Advertisement