மருத்துவக் கல்லுாரியில் பேறுகால சிகிச்சை பிரிவு திறப்பு எப்போது; ரயில்வே சுரங்க பாதை பிரச்னைக்கும் தீர்வு வருமா

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் மகப்பேறு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் 200 படுக்கைகள் உள்ளன. கர்ப்பிணிகளுக்கு 180 படுக்கைகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன. கடந்த ஆண்டு 4,460 பிரசவம் நடந்துள்ளது. இதில் 4553 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவக் கல்லுாரி துவங்கியதில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. அதிக இட நெருக்கடியும் ஏற்படுகிறது.

சில நேரங்களில் கர்ப் பிணிகளுக்கு போதிய படுக்கை வசதி கிடைப்பதில்லை. இதனால் மகப்பேறு பிரிவில் கூடுதல் படுக்கை வசதியுடன் மகப்பேறு பிரிவு கேட்டு நீண்ட நாட்களாக மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது.

கட்டடம் கட்டப்பட்டு 4 மாதத்தை கடந்த நிலையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் சிவகங்கை வருகை தந்தபோது இந்த புதிய கட்டடம் திறக்கப்படும் என டாக்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் கட்டடம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், கட்டடத்திற்கு டி.டி.சி.பி., அப்ரூவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மின் இணைப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. மின் இணைப்பு பெற்ற பிறகு தான் கட்டடம் பயன்பாட்டிற்கு வரும். ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கட்டடம் திறக்கப்படும் என்றனர்.

ரயில்வே சுரங்க பாதைக்கு தீர்வு எப்போது



சிவகங்கையில் 2012ம் ஆண்டில் மதுரை தொண்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதை அமைத்தனர். சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர் வெளியேற தேவையான பணிகளை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் சிறு மழைக்கு கூட ரோட்டில் செல்லும் மழைநீர் சுரங்கப்பாதையில் தேங்கிவிடும்.

பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நகராட்சி சார்பில் மின் மோட்டார் பொருத்தி மழைநீரை அவ்வப்போது வெளியேற்றுகின்றனர். எனினும் அடிக்கடி மின்மோட்டார் பழுது எனக்கூறி தண்ணீரை வெளியேற்றுவதில்லை. இன்று ஆய்வுக்கு வரும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த இடத்தை பார்வையிட்டு பிற பகுதிகளில் சுரங்கபாதைக்கு கூரை அமைத்து தண்ணீர் செல்வதை தடுப்பது போல் இந்த பகுதிக்கும் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement