கூடுதல் மகசூல் தரும் காவிரி பூவன்

பூவன் வாழை ரகத்தில் கருங்கோடு வரித்தேமல் நோய் எனப்படும் வைரஸ் நோய் தாக்காத ரகத்தை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம். இந்தியாவின் மொத்த வாழை சாகுபடியில் 17 சதவீத பரப்பளவில் பூவன் ரக வாழை பயிரிடப்படுகிறது. தமிழகத்தின் மண், தட்பவெப்பநிலை பூவன் வாழை சாகுபடிக்கு சாதகமாக உள்ளதால் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடம் வகிக்கிறது. இங்கு அனைத்து பகுதிகளிலும் இலைக்காக சாகுபடி செய்யப்படுகிறது. கருங்கோடு வரித்தேமல் வைரஸ் நோய் தாக்கினால் இலைகள் சுருண்டு விடும்.

முதல் அறுவடை முடிந்த பின் 2வது அறுவடையில் 30 முதல் 40 சதவீத விளைச்சல் குறைந்து விடும். திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பூவன் வாழை ரகம் அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் கருங்கோடு வரித்தேமல் நோய் எனப்படும் வைரஸ் நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. நோய் தாக்கிய இலைகள் சுருண்டு விடும். மஞ்சள் நிறத்தில் கோடு கோடாக உருவாகும். வாழைத்தாரில் உள்ள காய்களில் விதை (கொட்டை வாழை) அதிகமாக இருக்கும். காலம் காலமாக இந்த வைரஸ் வாழைமரங்களை தாக்கி சேதத்தை விளைவிக்கிறது. 3000 வாழைக்கன்றுகள் நடவு செய்தால் அதில் 400 வாழைகளில் இந்நோய் தாக்குதலால் பொருளாதார இழப்பீடு அதிகரித்து வந்தது.

தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நோய் தாக்குதல் இல்லாத 500 பூவன் கன்றுகளை 2005 ல் தேர்வு செய்தோம். அவற்றை சாகுபடி செய்து அறுவடை செய்த போது ஆண்டுதோறும் வைரஸ் நோய் உருவானது. திருக்காட்டுப்பள்ளி மண்ணில் நோய் தாக்குதல் இல்லாத வாழை இங்கு வந்த பின் வைரஸ் தாக்கத்திற்கு ஆளானது. அதை ஒவ்வொரு முறையும் அகற்றினோம். வைரஸ் நோய் தாக்குதல் இல்லாத வாழையை 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் விளையவைத்து ஆராய்ச்சி செய்தோம்.

அதில் வைரஸ் உள்ளதா, அறுவடை அளவு மாறுபடுகிறதா என்பதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்தோம். அவற்றை பி.சி.ஆர்., (பாலிமெரேஸ் செயின் ரியாக் ஷன்) பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைரஸ் நோய் தாக்குதல் இல்லாமல் விளைச்சல் கிடைத்தது. 2017ல் வைரஸ் தாக்காத வாழை ரகம் தேர்வு செய்யப்பட்டு திசுவளர்ப்பு கூடங்களில் இனப்பெருக்கம் செய்து இதன் தரத்தை ஆராய்ச்சி மையங்களில் மூன்று ஆண்டுகள் கள ஆய்வு செய்யப்பட்டது. 2022 ல் வைரஸ் தாக்காத, அதிக மகசூல் தரக்கூடிய காவிரி பூவன் ரகமாக வெளியிடப்பட்டது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களுக்கு இதுவரை 6 லட்சம் வாழைக்கன்றுகளை திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்து வழங்கியுள்ளோம். வழக்கத்தை விட 28 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. வைரஸ் நோய் தாக்குதல் இல்லாதது விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாகி விட்டது. இந்த ரகத்தை அனைத்து இடங்களிலும் பயிரிட அறிவுறுத்தியுள்ளோம். பழைய வைரஸ் தாக்கும் பூவன் ரகத்தை அகற்றிவிட்டோம்.

தற்போது வைரஸ் நோய் தாக்காததால் 5 அறுவடை வரை செய்யலாம். முதல்முறை தார் அறுவடை செய்த பின் அடுத்தடுத்து 5 கன்றுகள் மூலம் இலை உற்பத்தியின் பயனை அனுபவிக்கலாம். 15 மாதங்கள் இலைகளை பறித்து விற்கலாம். இந்த வாழைக்கு முட்டு கொடுக்க வேண்டும். வாழைக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 6 மாதத்திற்கு முன்பே தெரிவித்தால் அதற்கேற்ப உற்பத்தி செய்து தரப்படும். தேவைப்படுவோர் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இ-காமர்ஸ் இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

-கற்பகம், முதன்மை விஞ்ஞானி செல்வராஜ், இயக்குநர் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் தோகை மலை ரோடு, தாயனுார் அஞ்சல் திருச்சி

Advertisement