உடல் நலமின்றி தவித்த கோவை யானை உயிரிழப்பு

கோவை : கோவையில், நான்கு நாட்களாக உடல்நலக் குறைவால் தவித்த பெண் யானை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில், 17ம் தேதி மாலை, பெண் யானை உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கீழே விழுந்தது.
நீண்ட நேரமாக எழ முடியாமல் கிடந்ததால், வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். அதனுடன் இருந்த குட்டி யானை, வனத்துறையினரை விரட்டியதால், சிகிச்சை அளிக்க முடியவில்லை. கும்கி வரவழைக்கப்பட்டதும், குட்டி யானை வனப்பகுதிக்குள் ஓடியது.
பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் சற்று தேறியதால், 'கிரேன்' உதவியுடன் 'பெல்ட்' கட்டி நிற்க வைத்தனர். நான்காம் நாளான நேற்று, நிலத்தில் குழி தோண்டி, தண்ணீர் நிரப்பி, கிரேன் இயந்திரம் மூலம் யானையை இறக்கி, 'ஹைட்ரோதெரபி' என்ற சிகிச்சை அளித்தனர். அப்போது, யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது. இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும்.
யானை உயிரிழந்ததால் வன ஆர்வலர்கள் சோகமாகினர். யானை விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் யானையின் சாணம் காணப்படுகிறது. குப்பை குவியலுக்குள் உணவு தேடியபோது, யானை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டிருக்கலாம் என, வன ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த, 18ம் தேதி, கும்கி வந்தபோது, குட்டி யானை வனப்பகுதிக்குள் ஓடியது. தற்சமயம் பாரதியார் பல்கலை பின்புறம் உள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது. மூன்று வயதான குட்டி என்பதால், தாய்ப்பால் எதிர்பார்க்காமல், தானே உணவு எடுத்துக் கொள்கிறது. இதே வனப்பகுதியில் உள்ள மற்ற யானைகளுடன் இணைந்திருக்க வாய்ப்புள்ளது. குட்டியை தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்