இ.சி.ஆரில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணியில் குளறுபடி; ரூ.495 கோடி வீணாகுமோ என நலச்சங்கங்கள் அச்சம்

நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆரில் நீலாங்கரை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில், 418 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது.
இதற்காக, 17 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்து, 139 கி.மீ., துாரத்தில் பிரதான குழாய்களும், 24 கி.மீ., துாரத்தில் உந்து குழாய்களும் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், நீலாங்கரையில் 77 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டத்திற்கு, 52 கி.மீ., குடிநீர் பகிர்மான குழாய் பதித்து, 22 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. மொத்த பணிகளும், 2023 நவ., மாதம் துவங்கின.
இதற்கு, சாலை துண்டிப்பு முக்கிய பணியாக உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், மாநகராட்சி, மின் வாரியம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளை, குடிநீர் வாரியம் ஒருங்கிணைத்து, சாலை துண்டிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பணியை முறையாக செய்யாமல், ஆங்காங்கே பள்ளம் தோண்டி பாதியில் நிறுத்தி செல்வதாக அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பள்ளம் தோண்டிய பகுதியை முறையாக மூடாததால், அதில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
மேலும், நீரோட்டம் பார்த்து குழாய் பதிப்பதில்லை என்ற புகாரும் வருகிறது. இதனால், இணைப்பு வழங்கும்போது, புதுப்பித்த சாலையை மீண்டும் சேதப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வடிகால்வாய் திட்ட பணிகளும் நடப்பதால், யார் முதலில் பணி செய்வது என்ற பிரச்னை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் இடையே ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லுார் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த ஒரு நிர்வாகி கூறியதாவது:
சாலையை துண்டித்து குழாய் பதித்தபின், அதை கடினத்தன்மை உடைய மண் கொட்டி மூட வேண்டும். எளிதில் உள்வாங்கும் பள்ளமாக இருந்தால், அதில், ஜல்லி கலந்த மண் கொட்டி முறையாக சமப்படுத்த வேண்டும்.
ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் சமப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும். ஆனால், குழாய் பதித்த பின், பள்ளத்தில் இருந்து எடுத்த மண்ணை, சாலைக்கு மேல் ஒன்றரை அடி உயரம் வரை கொட்டுகின்றனர்.
உள்வாங்காத வகையில் பள்ளத்தை சமப்படுத்துவதில்லை. இதனால், வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி, கிரேன் வாயிலாக மீட்க வேண்டி உள்ளது.
முறையான பயிற்சி, முன் அனுபவம் இல்லாத ஊழியர்களால் பள்ளம் தோண்டப்படுவதால், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள், பழைய குடிநீர் குழாய் சேதமடைகின்றன. ஒப்பந்ததாரர், அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் கூறுவதில்லை.
ஏற்கனவே, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில், திட்ட பணிகளை செய்து ஆறு ஆண்டுகள் கடந்தும், இன்னும் முறையாக இணைப்பு வழங்கவில்லை.
அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படாத வகையில், உயர் அதிகாரிகள் தலையிட்டு, பணியை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு தெருவில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டினால், அதை முழுமையாக முடித்த பின் அடுத்த தெருவில் பணி துவங்க வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்திற்கு வலியுறுத்தி உள்ளோம்.
ஒப்பந்த நிபந்தனைப்படி பணி செய்யவில்லை என, மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. மேலாண்மை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு