நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கைது


மும்பை: மஹாராஷ்டிரவில் பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். அதையடுத்து பாபா சித்திக்கின் நண்பரான நடிகர் சல்மான்கானையும் கொலை செய்ய அந்த கும்பல் திட்டமிட்டடிருந்தது தெரிய வந்தது. பிறகு, சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.


இந்த நிலையில், நடிகர் சல்மான் கானின் வீட்டுக்குள் நுழைந்த 23 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த 20ம் தேதி பந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டுக்குள் ஜிதேந்தர் குமார் சிங் என்பவர் நுழைந்துள்ளார். அப்போது, சல்மானின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் செல்போனை தரையில் போட்டு உடைத்துள்ளார்.


அன்றைய தினம் மாலை கேலக்ஷி அபார்ட்மென்டில் வசித்து வந்த வேறு ஒருவரின் காரின் மூலமாக, அபார்ட்மென்டுக்குள் நுழைந்துள்ளார். அவர் மீண்டும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். சல்மான் கானை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி செய்துள்ளார், எனக் கூறினர்.

Advertisement