மாவட்டத்தில் உடல் மெலிந்த குழந்தை விகிதம் குறைந்தது! 'திஷா' கமிட்டி கூட்டத்தில் தகவல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு, உயரத்துக்கேற்ற எடை, வயதுக்கேற்ற உயரம் குறைந்த குழந்தைகள் விகிதம் குறைந்திருப்பதாக, 'திஷா' கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு (திஷா) கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள்:

திருப்பூர் மாவட்டத்தில், 1,303 முதன்மை மையங்கள், 169 குறு மையங்கள் என, 1,472 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கர்ப்பிணிகள் 9,691 பேர், பாலுாட்டும் தாய்மார்கள் 7,808 பேர்; 5 மாதம் முதல் 5 வயது வரையிலான 1,04,565 பேர் என, மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 64 பேர் உள்ளனர். இவர்களில், 79,537 பேர் இணை உணவு பெறுகின்றனர்; 28,659 குழந்தைகள் மதிய உணவு, 50 ஆயிரத்து 748 பேர் முட்டை பெறும் பயனாளிகளாக உள்ளனர்; 754 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ள, 14 வட்டாரங்களில், அளவீடு எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 979 குழந்தைகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 212 குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளனர்; 7.6 சதவீதம் பேர், அதாவது 8,767 குழந்தகள் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத நிலையில் உள்ளனர். எடையளவு எடுக்கப்பட்ட மொத்த குழந்தைகளில், 4.1 சதவீதம் பேர், அதாவது 4,722 குழந்தைகள் எடையளவு குறைவாக உள்ளனர்.

வழங்கல் பிரிவு அலுவலர்கள்:

-----------------------

மாவட்டத்தில், 1,500க்கு மேல் கார்டு உள்ள கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்தில், புதியதாக, 87 ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 7,200 கார்டுதாரர்களுக்கு, அங்கீகார சான்று மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில், கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், 421 வெளிமாநில கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் முதியோர் கைரேகை பதிவு செய்து பொருட்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. வீடு தேடிச் சென்று கண் கருவிழி பதிவு செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், 'ஒருநபர் கார்டு தாரர்கள், தாசில்தாரிடம் சென்று அங்கீகார சான்று பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்,' என்றார்.

மாவட்ட வழங்கல் அதிகாரிகள், 'ஒருநபர் கார்டுதாரர்கள் தங்களுக்கு பதிலாக பொருட்கள் பெறும் பிரதிநிதி நியமிப்பதற்கான அங்கீகார சான்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது,' என்றனர்.

குறுக்கிட்ட மண்டல தலைவர், 'முதியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மிகவும் சிரமப்படுவர்,' என்றார். கலெக்டர் கிறிஸ்துராஜ், 'ஒருநபர் கார்டுதாரர் அங்கீகார சான்றுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தலாம்; இதனால், முதியவர்கள் பயன்பெறுவர். அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகார சான்று புதுப்பிப்பதற்கு பதிலாக, ஒருமுறை பெறப்படும் சான்றை, ஆயுள்வரை பயன்படுத்தும்வகையில் மாறுதல் செய்ய, அரசுக்கு கருத்துரு அனுப்பலாம்,' என்றார்.

வேளாண் துறை அதிகாரிகள்:

------------------------

திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25 காரீப் பருவத்துக்கு, 35 விவசாயிகள், 52 ஏக்கர் பரப்பளவுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்; 2024 - 25 சிறப்பு பருவத்தில், 221 விவசாயிகள், 262 ஏக்கர் பரப்பளவுக்கும், ராபி பருவத்தில், 1902 விவசாயிகள், 1828 ஏக்கர் பரப்பளவுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். தற்போது, மகசூல் இழப்பீடு கணக்கீடு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கல்வித்துறை அதிகாரிகள்:

---------------------

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 - 23 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1,162 மையங்கள் மூலம், 16 ஆயிரத்து 930 கற்போர் பயன்பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு, அரசு அதிகாரிகள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளித்தனர்.

----------------------------------------------

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று திஷா கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர், எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



என்ன முன்னேற்றம்...

அதனை சொல்லுங்க!-----------------ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பிரிவினர், மாவட்டத்தில், எடையளவு குறைந்த மற்றும் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை மற்றும் விகிதங்கள் குறித்து பேசினர். எதிர்மறை புள்ளி விவரங்களை விரும்பாத கலெக்டர் கிறிஸ்துராஜ், ''கடந்தாண்டை விட இந்தாண்டு என்ன முன்னேற்றம் இருக்கிறது. அதனை சொல்லுங்கள்,'' என்றார். இதனை தொடர்ந்து, குழந்தை வளர்ச்சி திட்டத்தினர், 'நம் மாவட்டத்தில், வயதுக்கேற்ற உயரம் குறைந்த குழந்தைகள் விகிதம், 21.5 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் தற்போது, 7.6 சதவீதமாக, 13.9 சதவீதம் குறைந்துள்ளது. 15.3 சதவீதமாக இருந்த உயரத்துக்கேற்ற எடையில்லாத (மெலிவுத்தன்மை) குழந்தைகள் விகிதம், தற்போது 2.7 சதவீதமாக குறைந்துள்ளது,' என்றனர்.கலெக்டர் மேலும் பேசுகையில், 'நல்ல ஊட்டச்சத்துக்கள், சத்து மாவுக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனாலேயே, உயரம் குறைந்த, எடையளவு குறைந்த குழந்தைகள் விகிதம் குறைந்துள்ளது. இந்த விகிதம் விரைவில், பூஜ்ஜிய நிலையை எட்ட வேண்டும்,' என அறிவுறுத்தினார்.

Advertisement