ஏழுமலையான் கோவிலில் வருகிறது ஏ.ஐ., தொழில்நுட்பம்

3

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சுவாமி தரிசனம்



ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் திருக்கோவில் உலகப் புகழ் பெற்றது. நாடு முழுதும் இருந்து, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.


ஏழுமலையானை தரிசிப்பதற்கான டோக்கன் பெறுவது, தங்குமிட வசதி போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகளும், ஆள் மாறாட்டமும் நடப்பதாக புகார் எழுவது வழக்கம். இதை முற்றிலுமாக ஒழிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நவீன தொழில்நுட்பங்களை கையில் எடுக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



இது குறித்து, தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:


பக்தர்களின் புனித பயணத்தை முழுதுமாக மேம்படுத்த, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அங்கீகாரம் பதிவு



பக்தர்களுக்கு தினசரி தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அப்போது, அவர்களின் முக அங்கீகாரம் பதிவு செய்யப்படும்.


இதனால், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் தவிர்க்கப்படும். பக்தர்கள் சரிபார்ப்பு, விடுதிகளில் அறைகளை பெறுவது போன்ற நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும்.


திருமலை முழுதும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்படும்.


இதன் வாயிலாக பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதுடன், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், கூண்டுகளில் காத்திருப்போர், கோவில் உள்ளே இருப்போர் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும்.


இதனால், தரிசனத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்ற தகவல்களை பக்தர்கள் துல்லியமாக பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement