பரமேஸ்வர் கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு காங்., காரணம் என்கிறார் மத்திய அமைச்சர்

பெங்களூரு: ''உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் கல்லுாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரே காரணம்,'' என மத்திய சிவில் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம் சாட்டி உள்ளார்.

நடிகை ரன்யாராவ் தங்கம் கடத்திய வழக்கில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத வகையில், பரமேஸ்வருக்கு சொந்தமான கல்லுாரிகள், அறக்கட்டளை நிறுவனங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சோதனையின் முடிவில் சில ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

முக்கிய புள்ளி



இந்நிலையில், ரன்யாராவின் கிரெடிட் கார்டு பில் தொகை 40 லட்சம் ரூபாய், கல்வி அறக்கட்டளை நிறுவனம் கட்டியுள்ளது எனவும், இதில் ஒரு முக்கிய புள்ளிக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில், நேற்று துமகூரில் உள்ள அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி குழுமங்கள் உட்பட 16 இடங்களில் 40 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில், பரமேஸ்வர் இல்லத்திற்கு நேரில் சென்று சிவகுமார் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், 'ரன்யாராவின் குடும்ப நிகழ்ச்சிக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் அளித்திருக்கலாம். அதற்காக அவரை தங்கம் கடத்தலுக்கு பரமேஸ்வர் ஊக்குவித்தார்' என கூற முடியாது என்று புதிய குண்டை போட்டார்.

காழ்ப்புணர்ச்சி



இது, மாநில அரசியலில் பேசும் பொருளாக மாறியது. வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஈ.டி., ரெய்டு நடப்பதாக குற்றம் சாட்டினர்.

மத்திய சிவில் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:

உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் கலலுாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு, காங்கிரஸ் தான் காரணம். அக்கட்சியில் ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சோதனை நடக்கிறது. 2013ல் பரமேஸ்வரை தோற்கடித்தவர் முதல்வர் சித்தராமையாவே.

தங்கம் திருட்டு வழக்கில் அமாலக்கத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது யார். இதை எழுதியது யார் என்பது முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியும். அவர் நாடகம் ஆடுகிறார். பரமேஸ்வர் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. அதே சமயம், தவறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முழு ஒத்துழைப்பு



உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகை யில்,''அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். சோதனை குறித்து கருத்து தெரிவிக்க விருப்பமில்லை. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் பேசுவேன்,'' என்றார்.

Advertisement