அங்கன்வாடி மையங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துங்க

உடுமலை : அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலையில் 136, குடிமங்கலத்தில் 55 மடத்துகுளத்தில் 60 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இம்மையங்களில் அடிப்படையாக முழுமையான கட்டமைப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் வேண்டும்.

இதுதவிர, கூடுதலான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மையங்களில் இருப்பதில்லை. இதில் முக்கியமானது சுற்றுச்சூழல் சுகாதாரம். பெரும்பான்மையான அங்கன்வாடி மையங்களில் சுற்றுச்சுவர் இல்லாததால், பல வளாகங்களை சுற்றிலும் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இன்னும் சில கிராமப்பகுதிகளில், இவற்றின் அருகிலேயே திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாற்றுகின்றனர். இதனால் மையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, மையங்களில் கொசு வலைகள் பயன்படுத்துவதும் இல்லை. அங்கன்வாடி மையங்களை சுற்றிலும் துாய்மையுடன் பராமரிப்பதற்கும், ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், மையங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவதற்கும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement