மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்

1

பழநி: பழநி அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு சரிய, சமயோசிதமாக செயல்பட்ட கண்டக்டர் 50 பயணிகளை காப்பாற்றி உள்ளார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


பழநியில் இருந்து புதுக்கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.


கணக்கம்பட்டி என்ற இடத்தில் பஸ் சென்ற போது, டிரைவர் பிரபு திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு அவஸ்தைப்பட்டுள்ளார். உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்த எத்தனித்து, வண்டியின் வேகத்தை குறைத்தபடி கியர் பாக்ஸ் மீது அப்படியே விழுந்துள்ளார்.


இதைக் கண்ட கண்டக்டர், பயணிகளில் சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், டிரைவர் பிரபு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


சம்பவத்தின் போது பஸ்சில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில், மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பிரபு சரிய, கண்டக்டர் சமயோசிதமாக செயல்பட்டு கையால் பிரேக்கை அழுத்தி பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளார். இந்த காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement