உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க...

புதுச்சேரி : பிரதமரின் சூரிய மின் திட்டத்தில் மாற புதுச்சேரியில் 1,751 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 995 வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் சூரிய ஒளி மின் திட்டத்தை துவக்கி வைத்தார்.

நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றன.

புதுச்சேரியை பொருத்தவரை இதுவரை 1,751 பேர் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த விண்ணப்பித்துள்ளனர். இதில் 995 வீடுகளில் சோலார் பேனல்கள் மானிய நிலையில் பொருத்தப்பட்டுள்ளன.

மானிய விவரங்கள் என்னென்ன?



குடியிருப்பு வீடுகளுக்கு ஒரு கிலோ வாட் முதல் 2 கிலோ வாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோ வாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.

மாத மின் நுகர்வு சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரைஇருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 தான்.

எப்படி பதிவு செய்வது



இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அப்புறம் என்னங்க.. நீங்களும் சீக்கிரமாக பிரதமரின் சூரிய ஒளி திட்டத்திற்கு மாறுங்க.. மாத பட்ஜெட்டை சேமிங்க..... கூடுதல் விபரங்களுக்கு 94890-80373, 94890-80374 மற்றும் ee2ped.py.gov.in என்ற இமெயில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement