ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்

1

கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பீறிட்டு வெளியேறும் தண்ணீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


@1brமேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு, மூன்றாவது குடிநீர் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தண்ணீர் கொண்டு செல்ல இரும்பு குழாய் பதிக்கப்பட்டது.


ஒரு குழாயோடு மற்றொரு குழாயை வெல்டிங் செய்து இணைக்கப்பட்டது. இரண்டு மூன்று குழாய்கள் இணைத்த பின்பு, தண்ணீர் நிரப்பி அழுத்தம் செய்து, ஏதேனும் கசிவு ஏற்படுகிறதா என சோதனை செய்த பின்பு, தொடர்ச்சியாக குழாய்கள் பதித்து வந்தனர்.


இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நடூர் பாலம் அருகே திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் கசிந்து வெளியேறி வந்தது. இது குறித்து தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது.


ஆனால் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக சரி செய்யவில்லை. இந் நிலையில் இன்று(மே23) மதியம், 3:00 மணி அளவில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் 20 அடி உயரத்திற்கு மேல் பீச்சி அடித்தது.


இதனால் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன், குடிநீர் பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டது.

Advertisement