சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்க தேசத்தினர் 121 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், டில்லியின் நரிலா தொழிற்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் 871 பேரின் ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர்.
சந்தேகப்படும் வகையில் இருந்த சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களது மொபைல் போன் அழைப்புகள், ஆவணங்களை பரிசோதித்தபோது, வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்திருப்பது தெரியவந்தது.
சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றோம்" என்று துணை போலீஸ் கமிஷனர் நிதின் தெரிவித்தார்.
டில்லியில் சட்ட விரோதமாக தங்கி இருக்க, வங்க தேசத்தினருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த இந்தியர்கள் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.





