மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம் புரோக்கரை கொன்ற கணவர் கைது

மங்களூரு: கர்நாடகாவில் மனைவி பிரிந்து சென்றதால் கோபமடைந்த கணவர், தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை குத்தி கொலை செய்தார்.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரின் வளசில் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலைமான், 50; திருமண புரோக்கர்.

இதே பகுதியில் வசிக்கும் முஸ்தபா, 30, என்பவருக்கு பெண் பார்த்து கொடுத்தார். எட்டு மாதங்களுக்கு முன், அந்த பெண்ணுக்கும், முஸ்தபாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவருடன் வாழ பிடிக்காமல் இரண்டு மாதங்களுக்கு முன், மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தன்னுடன் வாழ வரும்படி முஸ்தபா மன்றாடியும் அவர் வரவில்லை.

தனக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்யவில்லை என, புரோக்கர் சுலைமான் மீது முஸ்தபா கோபம் கொண்டார்; அவரை வாய்க்கு வந்தபடி திட்டினார். நேற்று முன்தினம் இரவு, முஸ்தபா மொபைல் போனில் சுலைமானை தொடர்பு கொண்டு திட்டினார்.

அவரை சமாதானம் செய்ய, தன் மகன்கள் ரியாப், சியாப் ஆகியோருடன் முஸ்தபா வீட்டுக்கு சுலைமான் வந்தார். மகன்களை சாலை ஓரம் அமர வைத்துவிட்டு, பேசுவதற்காக வீட்டுக்குள் சென்றார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

இதனால் பேச்சை நிறுத்திவிட்டு, சுலைமான் வெளியே வந்தார். அப்போது கத்தியுடன் ஓடி வந்த முஸ்தபா, அவர் கழுத்தில் குத்தினார்; காப்பாற்ற வந்த அவரது மகன்களையும் குத்தினார். அப்பகுதியினர், காயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் சுலைமான் உயிரிழந்தார்.

வலது கையில் காயமடைந்த ரியாப், மார்பில் காயமடைந்த சியாப் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.

Advertisement