அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு

7


வாஷிங்டன்: "அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்"என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.


அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவியது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது.


அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் கூறியிருந்தார். தற்போது இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:


அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்க கூடாது. அமெரிக்காவிலே உற்பத்தி செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன்.


அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement