முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ திருப்புமுனையை ஏற்படுத்தும் அமைச்சர் மூர்த்தி பேச்சு

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ வரும் சட்டசபை தேர்தலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
மதுரையில் மே 31, ஜூன் 1 (பொதுக் குழு) ஆகிய இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக மதுரை வடக்கு, தெற்கு, நகர் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
அமைச்சர் தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொதுக் குழு உறுப்பினர் ஜெயராம், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ராஜா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பகுதிச் செயலாளர்கள் மருது, சசிகுமார், புண்ணியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை மூன்று மாவட்டங்களும் இணைந்து பிரமாண்டமாக நடத்த வேண்டும். முதல்வர் ரோடு ஷோ அவனியாபுரத்தில் துவங்கி வில்லாபுரம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம், குரு தியேட்டர் வழியாக நடக்கிறது. மறைந்த மேயர் முத்து சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.
நிர்வாக தலைநகர் சென்னையாக இருந்தாலும், அரசியல் தலைநகராக மதுரை உள்ளது. பெரிய அரசியல் மாநாடுகள் மதுரையை சுற்றித்தான் நடந்துள்ளது.
அதுபோன்று முதல்வர் ரோடு ஷோவும் அரசியல் ரீதியாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார்.