'மேட்ச் ரெப்ரி' ஸ்ரீநாத்: உலக டெஸ்ட் பைனலுக்கு

துபாய்: உலக டெஸ்ட் பைனலுக்கான 'மேட்ச் ரெப்ரி'யாக இந்தியாவின் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 3வது சீசனுக்கான (2023-25) பைனல், வரும் ஜூன் 11-15ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான நடுவர்கள் பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் இந்தியா சார்பில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். 'மேட்ச் ரெப்ரி'யாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், நான்காவது அம்பயராக நிதின் மேனன் அறிவிக்கப்பட்டனர். ஆடுகள அம்பயர்களாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், நியூசிலாந்தின் கிறிஸ் கபானி களமிறங்கி உள்ளனர். 'டிவி' அம்பயராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பரோ அறிவிக்கப்பட்டார். இவர், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் சீசனுக்கான பைனலிலும் 'டிவி' அம்பயராக இருந்தார்.
ஐ.சி.சி., தலைவர் ஜெய்ஷா கூறுகையில், ''லார்ட்சில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் பைனலுக்கான நடுவர் குழுவில் அனுபவம் வாய்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தங்களது பணியை சிறப்பாக செய்திட வாழ்த்துகிறேன்,'' என்றார்.

Advertisement