சாய் சுதர்சன், கருண் எதிர்பார்ப்பு: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர் இடம் பெறலாம்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (லீட்ஸ்), ஜூன் 20ல் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கேப்டன் சுப்மன்: டெஸ்டில் இருந்து அனுபவ ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணி மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அடிக்கடி காயம் அடையும் பும்ரா, கேப்டன் 'ரேசில்' இல்லை. புதிய கேப்டனாக இளம் சுப்மன் கில் 25, நியமிக்கப்பட உள்ளார். துணை கேப்டன் பொறுப்பு ரிஷாப் பன்ட்டிற்கு வழங்கப்படலாம். துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், அனுபவ கே.எல்.ராகுல் களமிறங்கலாம். 'ரிசர்வ் ஓபனர்' அல்லது 3வது வீரராக தமிழக பேட்டர் சாய் சுதர்சன் இடம் பெறலாம்.
சுதர்சன் திறமை: தற்போதைய பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக சுதர்சன், 638 ரன் (13 போட்டி) குவித்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கவுன்டி அணிக்காக விளையாடியுள்ளார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்துள்ளார். இடது கை பேட்டரான இவர், பேட்டிங்கில் நுணுக்கத்தில் கைதேர்ந்தவர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப, நிதானமாக ஆடும் திறன் பெற்றவர்.
கருண் ரன் மழை: உள்ளூர் போட்டிகளில் அசத்தும் கருண் நாயரும் 3வது இடத்தை எதிர்பார்க்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் 4 சதம் உட்பட 863 ரன் (9 போட்டி) எடுத்த இவர், விதர்பா அணி கோப்பை வெல்ல உதவினார். விஜய் ஹசாரோ தொடரில் 5 சதம் உட்பட 779 ரன் (8 போட்டி) குவித்து, விதர்பா அணி 2வது இடம் பெற கைகொடுத்தார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய 'ஏ' அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ஷ்ரேயஸ், சர்பராஸ் கானும் 3வது இடத்தை குறி வைக்கின்றனர். 4வது இடத்தில் சுப்மன் கில் வரலாம்.
ஷமிக்கு 'நோ': கணுக்கால் காயத்தால் அவதிப்படும் முகமது ஷமி இடம் பெறும் வாய்ப்பு குறைவு. இவரது இடத்தை பிடிக்க பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட 'வேகங்கள்' போட்டியிடுகின்றனர். 'ஆல்-ரவுண்டர்' பணிக்கு ஷர்துல் தாகூர், நிதிஷ் குமார் உள்ளனர். ஷமி இல்லாதது, பும்ராவின் உடற்தகுதி பிரச்னை போன்றவை சிராஜ் மீதான சுமையை அதிகரிக்கும். அஷ்வின் ஓய்வு பெற்றதால், 'ஸ்பின்னராக' ரவிந்திர ஜடேஜா ஜொலிக்க வேண்டும்.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல், கருண் நாயர், சாய் சுதர்சன், சர்பராஸ் கான், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார், ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, ஷர்துல் தாகூர்.
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித், அனுபவ கோலி இல்லாமல் களமிறங்குவது கடினம். இது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்து கொடுத்துள்ளது. சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா இடம் பெறவில்லை. அப்போதும் நாட்டுக்காக விளையாட இன்னொரு வீரருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தான் சொன்னேன். இறுதியில் இந்தியா கோப்பை வென்றது.
வரும் 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் ரோகித், கோலி இடம் பெறுவரா என இப்போதே கூற முடியாது. இதற்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. சிறப்பாக செயல்படும் வரை 'வயது என்பது வெறும் நம்பர்' தான். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தி வருகிறோம்,''என்றார்.