அரசு ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்கள்?

புதுடில்லி,:அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் ஒப்பந்தங்களில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மத்திய - மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கொள்முதல் ஒப்பந்தங்களின் மதிப்பு, ஆண்டொன்றுக்கு 60 முதல் 64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அதிலும், 25 சதவீதம் சிறிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உள்நாட்டில் வாய்ப்புகள் இல்லாதபட்சத்தில், ரயில்வே, ராணுவத் துறை திட்டங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6ம் தேதி இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், மத்திய அரசின் குறிப்பிட்ட சில துறைகளில், சரக்கு, சேவை மற்றும் பணிகள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்களில், பரஸ்பரம் அடிப்படையில் பிரிட்டன் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள், 200 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புடைய இந்தியாவின் கொள்முதல் ஒப்பந்தங்களில் மட்டுமே பங்கேற்கலாம். இந்நிலையில், பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து, பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் அரசு ஒப்பந்தங்களுக்கான சந்தையை திறந்து விட இந்தியா தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசுடன் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில், வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.



சிறிய நிறுவனங்களுக்கு 25 சதவீத ஆர்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதை மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கும் போது, பரஸ்பர ரீதியில், இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு சந்தையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அனில் பரத்வாஜ் பொதுச் செயலர்இந்திய எம்.எஸ்.எம்.இ., கூட்டமைப்பு

Advertisement