அ.தி.மு.க., கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுமி காயம்
எம்.கே.பி.நகர், வியாசர்பாடியில், அ.தி.மு.க., கொடி கம்பத்தை தொட்ட சிறுமி, மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 82வது பிளாக்கைச் சேர்ந்தவர் மயில், 32; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மோகனா, 29. தம்பதிக்கு 4 வயதில் ரியா என்ற மகள் உள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க., பிரமுகர் விஜய் என்பவரது தாயின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
இதை முன்னிட்டு, அப்பகுதியில் அ.தி.மு.க., கட்சி கொடி கம்பங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி ரியா, அங்கிருந்த அ.தி.மு.க., கொடி கம்பத்தை தொட்டுள்ளார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், சிறுமியை கட்டையின் உதவியுடன் மீட்டு, எம்.கே.பி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.