வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., மினி பஸ் சேவை நீட்டிப்பு
வில்லிவாக்கம் நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., வரை, சிற்றுந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் பேருந்து நிலையம், தற்காலிகமாக ஐ.சி.எப்.,பிற்கு மாற்றப்பட்டது. இதனால், வில்லிவாக்கத்தில் இருந்து எம்.டி.எச்., சாலைக்கு செல்லவும், ரயில் நிலையம் மற்றும் ஐ.சி.எப்., பேருந்து நிலையங்களுக்கு செல்லவும், குறைந்தபட்சம், 50 -- 100 ரூபாய் வரை ஆட்டோவிற்கு செலவாகிறது.
வில்லிவாக்கத்தில் இருந்து சிற்றுந்துகள், சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன. குறிப்பாக, வழித்தடம் எண் 43எஸ், 44 என்ற சிற்றுந்துகள் வில்லிவாக்கம் வரை இயக்கப்படுகின்றன.
இவற்றில், புதுார் -- வில்லிவாக்கம் செல்லும் '43எஸ்' வழித்தடம் சிற்றுந்து, வில்லிவாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால், புதிதாக மாற்றப்பட்ட ஐ.சி.எப்., பேருந்து நிலையத்திற்கு செல்ல, மீண்டும் மற்றொரு பேருந்து அல்லது ஆட்டோவை தேட வேண்டிய நிலை நிலவுகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், வில்லிவாக்கம் வரை இயக்கிய, '43 எஸ்' சிற்றுந்து சேவை, புதிதாக மாற்றப்பட்ட ஐ.சி.எப்., பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வில்லிவாக்கம் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.