அரசு பள்ளிகளில் வண்ணமயமான ஓவியம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரி சோலுார்மட்டம் அரசு துவக்கப்பள்ளியில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி சோலுார்மட்டம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா மணி மற்றும் உமாதேவி ஆகியோரின் அழைப்பின் பேரில், கோடை விடுமுறையில் மூன்றாவது பள்ளியாக, திருப்பூர் பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு வண்ணம் பூசி ஓவியம் வரையப்பட்டது.
மூன்று பள்ளி கட்டடங்களுக்கும் வெளியே, மாணவர்களை கவரும் வகையில், கார்ட்டூன் பொம்மைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டது. மேலும், மாணவர்கள் தினசரி படிக்க உதவும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில சொற்கள் சுவரில் எழுதப்பட்டது.
இந்த ஓவிய முன்னெடுப்பு மூலம், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்துணர்வை தருவதுடன், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், ''அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க செய்வது எங்களது நோக்கம். எங்களால் முடிந்த ஓவியங்களை, எந்த தொகையும் வாங்காமல் பட்டாம்பூச்சி குழு மூலம் இலவசமாக தீட்டி வருகிறோம். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்,'' என்றார்.