சாலை விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தினால் தோப்புகள் அழியும்

அன்னுார் : கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள், 'தோப்புகள், மில்கள் பாதிக்கப்படும்,' என புகார் தெரிவித்தனர்.

கோவை-சத்தி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பசுமை வழிச் சாலை 1,912 கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 738 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த 409 பேரிடம் நான்கு கட்டங்களாக விசாரணை நடக்கிறது. மூன்றாம் கட்ட கூட்டம் நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அபிராமி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட மக்கள், அதிகாரிகளிடம் கூறுகையில்,' ஆலத்தூர் ஊராட்சியில் பல நூறு பேர் பணி புரியும் இரண்டு ஸ்பின்னிங் மில்கள் பாதிக்கப்படுகின்றன. மூன்று கிணறுகள், 15 ஏக்கர் விவசாய நிலம், 30 டி.டி.சி.பி., சைட்டுகள், வீடுகள், தென்னை மர தோப்புகள் பாதிக்கப்படுகின்றன,' என்றனர்

மதியம் பசூர் ஊராட்சி மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்து பேசுகையில்,' எங்கள் ஊரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலின் உள்கட்டமைப்பு கோவை மாவட்டத்திலேயே வித்தியாசமானது. கம்பி, ஜல்லி, சிமெண்ட் பயன்படுத்தாமல் கட்டி முடிக்கப்பட்டு தற்போதும் வழிபாட்டுத் தலமாக இருந்து வருகிறது. எனவே பசுமைவழிச் சாலைக்கு, கோவில் மற்றும் இப்பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'உங்களது கருத்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படும்,' என்றனர்.

Advertisement