ஜி.எஸ்.டி., விலக்கில் ரஸ்க் உணவை சேர்க்க வலியுறுத்தல்
மதுரை:ரஸ்க், பன் தயாரிப்பதற்கு ஒரே மூலப்பொருள் தான் என்பதால் ரஸ்க் பாக்கெட்டிற்கும் ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களின் சமையல் வேலைகளை எளிதாக்கும் வகையில் 'ரெடி டூ குக்' உணவுகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. பல்வகையான சத்து மாவு, தோசை மாவு, உப்புமா மிக்ஸ், ரவா இட்லி மிக்ஸ், சட்னி பொடி போன்ற தயாரிப்புகள் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இதற்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உள்ளது. இதற்கான மூலப்பொருட்கள் வரிவிலக்குடனும், 5 சதவீத வரியின் கீழும் உள்ளன. சத்துமாவில் ஏலக்காய் தவிர எந்தப்பொருளுக்குமே வரியில்லை. ஆனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ சத்து மாவு பாக்கெட்டிற்கு ரூ.20 வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிறு நிறுவனங்கள் 'காம்பவுண்டிங்' முறையில் இணக்கவரி செலுத்துகின்றன. சிலர் கணக்கில் காண்பிக்காமல் வணிகம் செய்வதால் உணவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்கின்றனர் தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம்.
வரி முரண்பாடுகள் குறித்து அவர்கள் கூறியதாவது: கோதுமை அல்லது மைதா மாவில் வட்ட பன், பால் பன் (மில்க் பிரெட்), ரஸ்க், வர்க்கி தயாரிக்கப்படுகிறது. பன் ஈரப்பத வடிவிலும் ரஸ்க் உலர் நிலையிலும் தயாரிக்கப்படுவதை தவிர மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை. பன்னுக்கு 5 சதவீதம், ரஸ்க், வர்க்கி வகைகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பிரட் வகைகளுக்கு தற்போது வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஸ்கையும் வரிவிலக்கில் சேர்க்க வேண்டும். மைதா அல்லது கோதுமையில் இருந்து சேமியா, நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டாலும் சேமியா, அரிசி அடைக்கு 5 சதவீதம், நுாடுல்ஸ்க்கு 12 சதவீத வரி என மாறுபட்டு உள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
அதேபோல ஈர இட்லி மாவு, ஈர தோசை மாவில் 'பிரிசர்வேடிவ்' சேர்க்காததால் அதிகபட்சம் ஒருநாள் வரையே தாங்கும். எனவே காய்கறி, இறைச்சியைப் போன்று இவற்றுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். சாதாரண பிஸ்கெட்களுக்கு 5 சதவீதம், உலர்பழங்கள், உலர்பருப்புகள், கிரீம்களுடன் தயாராகும் பிஸ்கெட்களுக்கு 18 சதவீத வரி உள்ளது. மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் பயன்பட்டாலும் 18 ஐ 12 சதவீத வரியாக குறைக்க வேண்டும்.
அப்பளம், வடகத்திற்கு வரிவிலக்கு உள்ளது. ஆனால் காய்கறியிலிருந்து வேகவைத்தோ அல்லது உலரவைத்தோ தயாரிக்கப்படும் வற்றலுக்கு 5 சதவீத வரி. வற்றல் என்பது தென்னிந்திய உணவுகளில் பிரதானம். இதைப்பற்றிய புரிதல் இல்லாததால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!
-
மனநலம் பாதித்த இளைஞர் அடித்து கொலை?
-
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
-
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது