பள்ளி வாகன சோதனை கண்துடைப்பு சோதனையில் 'டிரைவிங் ஸ்கூல்' ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

திருத்தணிதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ -- மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்கள் சோதனை செய்யும் பணி, திருத்தணியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு, 39 பள்ளிகளின் 155 வாகனங்கள் வந்தன.

வாகனங்களின் படிக்கட்டுகள், அவசர கால வழி, மருத்துவ உதவி பெட்டகம், 'சிசிடிவி' கேமரா மற்றும் வாகனத்தின் தகுதி சான்றிதழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், 135 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட 20 வாகனங்களின் தகுதி நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைபாடுகளை நீக்கி, மீண்டும் மறுஆய்வுக்கு வரவேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, எட்டு பள்ளி வாகனங்களை மட்டுமே ஆய்வு செய்து, ஆர்.கே.பேட்டையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அதேபோல், தீயணைப்புத் துறையினரும் பெயரளவுக்கே பங்கேற்று விட்டு சென்றனர்.

திருத்தணி டி.எஸ்.பி., போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் மட்டும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது, பல வாகனங்களை தனியார் ஓட்டுனர் பள்ளி ஊழியர்கள் சோதனை செய்தனர். இதை கண்ட பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி வாகன சோதனையில், திருத்தணி கோட்டத்தில் உள்ள பல்வேறு துறை உயரதிகாரிகள் பங்கேற்காதது, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

கலெக்டர் தலைமையில் நடக்க வேண்டும்

திருத்தணி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், கலெக்டர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் பங்கேற்றார். அவரிடம் தலித் மக்கள் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு, பள்ளி வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில், கலெக்டர் தலைமையில் வாகன சோதனை நடைபெற வேண்டும் எனக் கூறி மனு அளித்தார்.



அதிகாரம் அளித்தது யார்?

ஓட்டை, உடைசல் பள்ளி வாகனங்களில் இருந்து மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் நிறைய நடந்துள்ளது.தனியார் டிரைவிங் பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஓட்டுனர் பள்ளி ஊழியர்களுக்கு, வாகனங்களை சோதனை செய்யும் அதிகாரத்தை யார் தந்தது. இதனால், பள்ளி மாணவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement