இடுக்கியில் இன்று 'ஆரஞ்ச்' நாளை மறுநாள் 'ரெட்' அலர்ட்

மூணாறு:இடுக்கி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் இன்று 'ஆரஞ்ச்', நாளை மறு நாள் 'ரெட்' அலர்ட்டுகளை விடுத்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்க ஒரு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில் மாநிலத்தில் நேற்று இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 24) 'ஆரஞ்ச்', நாளை மறு நாள் (மே 26) 'ரெட்' ஆகிய அலர்ட்டுகளை விடுத்தது. தவிர மே 26ல் பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ' ரெட்' அலர்ட் விடுத்தது. ரெட் அலர்ட் விடுத்துள்ள மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.4 மி.மீ.,க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் திடீர் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று முதல் மழை வலுக்கும்



கடந்த சில நாட்களாக கேரளாவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இன்று முதல் மழை மேலும் வலுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உட்பட 12 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பருவ மழை வலுக்கும் நிலையில் மே 25, 26 தேதிகளில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement