முதல் ஹைட்ரஜன் ரயில் 'ரெடி' சிறப்பு குழு விரைவில் ஆய்வு

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இது குறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
முதல் முறையாக 118 கோடி ரூபாயில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்படுகிறது. இதன் பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.
இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.
ஏனெனில், அனல் மின் நிலையங்களில், மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதில் அந்த பிரச்னை இல்லை.
ஹைட்ரஜன் ரயிலை, முக்கிய நகரங்களில், குறுகிய துாரத்துக்கு மட்டுமே, முதல் கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ., துாரம் வழித்தடம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ரயில் இயக்குவதற்கு தேவையான, ஹைட்ரஜன் வாயு நிரப்பும் பணி, ரயில் நிலையங்கள் அருகில் அல்லது தற்போதுள்ள ரயில்வே பணிமனையின் அருகில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இந்த ரயிலில் கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும். முதல் ஜைட்ரஜன் ரயில் என்பதால், ரயிலின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, முழுமையாக ஆய்வு செய்ய, ரயில்வே வாரிய சிறப்பு குழு அதிகாரிகள், அடுத்த மாதம் இரண்டாம் வாரம் வருகின்றனர்.
குழு அளிக்கும், ஆய்வு அறிக்கையை பார்த்து, தேவைப்பட்டால் சில மாற்றங்கள் செய்வோம். இல்லாவிட்டால், சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
முதல் ஹைட்ரஜன் ரயில் என்பதால், சில மாதங்களுக்கு முழுமையாக சோதனை ஓட்டம் நடத்தப்படும். ரயில் பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகு, மக்கள் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும்
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
சர்வதேச சமூகத்துக்கு அவமானம்; ஐ.நா.,வில் பாகிஸ்தானை சாடிய இந்தியா!
-
மனநலம் பாதித்த இளைஞர் அடித்து கொலை?
-
கஞ்சா கடத்திய 3 பேர் கைது
-
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது