கோடை காலத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சொந்தமாக நிலம் வாங்கி வைத்தவர்கள் அதில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடும் போது, இயல்பாகவே மழைக்காலத்தை தவிர்ப்பது வழக்கம். மழைக்காலத்தை தவிர்த்து கோடைக் காலத்தில் வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டால் எந்த பிரச்னையும் வராது என்று மக்கள் நினைக்கின்றனர்.

கான்கிரீட் அடிப்படையிலான கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் மழைக்காலத்துக்கு இணையாக கோடைக் காலமும் ஒத்துவராது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் கட்டுமான பொருட்கள் நனைந்துவிடும், ஆனால், கோடையில் வெயில் தானே இருக்கும்;அப்போது என்ன பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

கட்டுமான பணிக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பது, அதை முறையாக பயன்படுத்தும் போது அதிக வெயில் இருக்கக் கூடாது. ஆனால், நம்மில் பலரும் நல்ல வெயில் இருந்தால் கான்கிரீட் கட்டுமான பணிகள் சிறப்பாக அமையும்; கலவை சீக்கிரமாக உலந்துவிடும் என்று நினைக்கின்றனர்.

உண்மையில், கான்கிரீட் கலவை தயாரிக்கும் போது அதில் எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பதற்கு வரைமுறை உள்ளது. இதற்கு உட்பட்டு தான் தண்ணீரை சேர்க்க வேண்டும், தயாரித்த கலவை வெயிலில் உலர்ந்துவிட்டது என்பதற்காக கூடுதலாக தண்ணீர் சேர்ப்பது நல்லதல்ல.

இவ்வாறு கட்டுமான பணியில் தண்ணீர் பயன்பாட்டில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரம், கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அப்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டால் அதை முறையாக நீராற்ற முடியாத நிலை ஏற்படும்.

கட்டுமானத்தில் தொடர்ந்து, 10 நாட்களுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்றால், அதில் மெல்லிய விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏற்படும் மெல்லிய விரிசல்கள் வழியே காற்று புகுந்தால், கட்டடத்தின் ஒட்டுமொத்த உறுதிதன்மையும் பாழாகும் நிலை ஏற்படும்.

இது மட்டுமல்லாது, கோடையில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகபட்ச அளவில் இருக்கும்நிலையில், திறந்த வெளியில் கட்டுமான பணிகளைமேற்கொள்ள கூடாது. இவ்வாறு பணிகளை மேற்கொண்டால் அது பணியாளர்களுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதிகபட்ச வெயில் இருக்கும் சமயத்தில் சில நாட்களுக்கு கட்டுமான பணிகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, கான்கிரீட் போடும் பணிகளை, உச்சபட்ச வெயில் துவங்கும் முன் அல்லது பிந்தைய சமயத்தில் மேற்கொள்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement