'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் வசதி மின் ஒப்பந்ததாரர் வலியுறுத்தல்

சென்னை:'புதிய உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு மின் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கட்டுமான பணிகளின் போது, ஒயரிங் வேலை உள்ளிட்ட பணிகளை செய்ய, மின் ஒப்பந்ததாரர்களுக்கு உரிமம் வழங்குவது, மின் கம்பியாளர், மின் மேற்பார்வையாளர்களுக்கு தகுதி சான்று வழங்குவது போன்ற பணிகளை, தலைமை மின் ஆய்வாளர் அலுவலகம் மேற்கொள்கிறது.

உரிமம் புதுப்பித்தலுக்கான காலத்தை, ஐந்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். புதிய உரிமம் பெறுதல், புதுப்பித்தல் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, மின் ஒப்பந்ததாரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மின் ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: மின் ஒப்பந்ததாரர்களுக்கு, இ.எஸ்.ஏ., எனப்படும் அனைத்து மின்னழுத்த மின்னமைப்பு பணிகள், இ.ஏ., எனப்படும், 33 கிலோ வோல்ட் வரையிலான அனைத்து மின்னமைப்பு பணிகள் உட்பட எட்டு பிரிவுகளில், தனித்தனியே உரிமம் வழங்கப்படுகின்றன. மொத்தம், 1,000க்கும் மேற்பட்ட மின் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.

புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு, படிவத்தில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனால், ஒப்புதலுக்கு பல மாதங்கள் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு, ஒருமுறை உரிமம் புதுப்பிக்கும் நடைமுறை உள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு, ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுகிறது.

எனவே, மற்ற மாநிலங்களில் இருப்பது போல், உரிமம் புதுப்பித்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுத்த வேண்டும். தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க, படிவத்துக்கு பதில், இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement