மலேசிய பாட்மின்டன்: பைனலில் ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 32, ஜப்பானின் யூஷி டனாகா 25, மோதினர். மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதற்கு முன், 2016ல் அரையிறுதி வரை சென்றிருந்தார். தவிர இவர், 6 ஆண்டுகளுக்கு பின், பி.டபிள்யு.எப்., 'வேர்ல்டு டூர்' தொடரின் பைனலுக்கு முன்னேறினார். கடைசியாக 2019ல் நடந்த இந்திய ஓபனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.
இத்தொடரின் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய 3வது இந்திய வீரரானார் ஸ்ரீகாந்த். ஏற்கனவே சவுரப் வர்மா (2014), பிரனாய் (2023) பைனலுக்கு சென்றனர்.இன்று நடக்கும் பைனலில் ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷிபெங் மோதுகின்றனர். ஸ்ரீகாந்த் கூறுகையில், ''மலேசிய மாஸ்டர்ஸ் பைனலுக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி,'' என்றார்.