ரூ.ஒரு கோடி நிலமோசடி பம்மதுக்குளம் நபர்கள் கைது

ஆவடி :கொடுங்கையூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரீகன்பால், 43. இவரது தாய் இன்கீரிட் லீனா என்பவர், கடந்த 2005ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம், பம்மதுக்குளம் கிராமத்தில், 3.86 சென்ட் இடத்தை, அரிபாபு என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு வேபா முராரி, கமலா சர்மா, வேபா சதாசிவம் மூவரும், போலி ஆவணங்கள் வாயிலாக, அவர்களது பெயருக்கு பதிவு செய்துள்ளனர். பின், அதை ராமகண்ணன் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளனர். இது குறித்த வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே வேபா முராரி, கடந்த 2023ம் ஆண்டு இறந்து விட, அவர் பெயரில் போலியான 'லைப் சர்டிபிகேட்' எனும் வாழ்வு சான்றிதழ் தயார் செய்து, காலாவதியான போலியான பொது அதிகாரத்தை, அவர்களது கூட்டாளிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், ரீகன்பால் புகார் அளித்துள்ளார். அதன்படி, நில பிரச்னை தீர்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான, பம்மதுக்குளம், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 62, ஞானமூர்த்தி, 56, ஆகிய இருவரையும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு, நிலபிரச்னை தீர்வு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.