சபரிமலையில் பாலிதீனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து: கேரள உயர் நீதிமன்றம்


சபரிமலை:பாலிதீன் குப்பைகளை சாப்பிட்ட வனவிலங்குகள் இறந்ததை தொடர்ந்து சபரிமலையில் பாலிதீன் தடையை கடுமையாக கடைபிடிக்கும்படி திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சபரிமலையில் பக்தர்கள் தடையை மீறி கொண்டு வரும் பாலிதீன் குப்பைகளால் விலங்குகள் இறந்ததாக வனத்துறையும், பாலிதீன் குப்பைகளால் சபரிமலை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சபரிமலை சிறப்பு ஆணையரும் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.


விசாரணை நடத்திய நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

சபரிமலையில் பாலிதீன் தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும். சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடி கட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ பாலிதீன் கவர்களை கொண்டுவரக்கூடாது என்ற அறிவிப்பை தேவசம்போர்டு வெளியிட வேண்டும். பாலிதீன் பயன்பாட்டை தடுக்க சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் வன பாதைகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். பிளாஸ்டிக் தடையை மீறி விற்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டல், கடைகளை நடத்துபவர்கள் பாலிதீன், உணவு கழிவுகளை பிரிக்காமல் உணவு குழியில் வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சன்னிதானத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்கள் பாலிதீன் வைத்திருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். தடையை தொடர்ந்து மீறினால் கடைக்கு சீல் வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Advertisement