பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்:அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் நேற்று கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது கேரளா கொங்கன் கடற்கரையில் இருந்து தெற்கில் மையம் கொண்டு நகர்ந்து வருகிறது. இதனால் கேரளா, தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, தென் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.
இதனால் நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வானிலை எச்சரிக்கையால் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மீனவர்களுக்கு தடை
இதன் மூலம் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து, பாம்பன் கடலோரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க மீன் வளத்துறையினர் அறிவுறுத்தினர்.