சதுரகிரியில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஸ்ரீவில்லிபுத்துார்:மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தி குறிப்பு:

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 25, 26) கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தாணிப்பாறை, சாஸ்தா கோயில், அய்யனார் கோவில், செண்பகத் தோப்பு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பிரதோஷ நாளான நேற்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை ஏராளமான பக்தர்கள் மலையேறினர். வெயிலின் தாக்கம் இல்லாமல் இதமான சூழல் நிலவியதால் சிரமமின்றி மலையேறி சுந்தரமகாலிங்கம்,சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 2:00 மணிக்கு மேல் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ய துவங்கியதால் காலதாமதமின்றி அடிவாரம் திரும்ப அறிவுறுத்தப்பட்டனர்

Advertisement