டில்லி உஷ்ஷ்ஷ்: நீக்கப்படுவாரா சசி தரூர்?

4

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்குள் இப்போதைய சர்ச்சை-, திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா? என்பதுதான்.

ஆப்பரேஷன் சிந்துாருக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக குரல் கொடுத்தவர் சசி தரூர். 'எத்தனை இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது?' என, ராகுல் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, சசி தரூரோ, பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். 'தாய்நாட்டிற்காக பேசுவதில் என்ன தவறு?' என்றும், தன் கட்சிக்காரர்களிடம் கூறியுள்ளாராம் தரூர்.

இதனால், சசி தரூர் மீது கோபத்தில் உள்ளார் ராகுல். ஏற்கனவே, காங்கிரசின் நிலை குறித்து சசி தரூர் வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையே, ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்ற குழுக்களில் ஒன்றிற்கு, தலைமை தாங்கி சென்றுள்ளார் சசி தரூர். காங்கிரஸ் சார்பாக வெளிநாடு செல்ல, வேறு பெயர்களை பரிந்துரை செய்திருந்தார் ராகுல்; அதில் சசி தரூர் பெயர் இல்லை. இருப்பினும், அவரை தேர்ந்தெடுத்தார் மோடி. இது, ராகுலின் கோபத்தை மேலும் அதிகப்படுத்திவிட்டது.

சசி தரூர் இந்தியா திரும்பியதும், அவர் கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்புள்ளதாக, காங்கிரஸ் கட்சிக்குள் பேசப்படுகிறது.

Advertisement