விதான்சவுதாவை சுற்றி பார்க்கும் சுற்றுலா திட்டம் இன்று துவக்கம்

பெங்களூரு: பெங்களூரின் விதான் சவுதாவை சுற்றிப்பார்க்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைக்கிறார்.

கர்நாடக சபாநாயகராக, காதர் பொறுப்பேற்ற பின், பல மாற்றங்களை கொண்டு வருகிறார். விதான்சவுதாவில் முதன் முறையாக, 'புத்தக மேளா' நடத்தினார். சட்டசபை உள்ளே பார்வையிட அனுமதி வழங்கினார். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

அதே போன்று, பெங்களூரின் விதான்சவுதாவை பொது மக்கள் கண்டு ரசிக்கும் நோக்கில், சுற்றுலா திட்டத்தை வகுத்தார். இத்திட்டத்தை, முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு நகருக்கு வரும் சுற்றுலா பயணியர், விதான்சவுதாவை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு, கட்டடத்தின் பாரம்பரியம், வரலாறு மற்றும் மகத்துவத்தை தெரிவிக்கும் நோக்கில், சுற்றுலாத்துறை சார்பில் 'Walking Guided Tour' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இன்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.

விதான் சவுதாவை பார்க்க வரும் சுற்றுலா பயணியர், 50 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இலவசம். மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் விதான் சவுதாவை காண, பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்படும்.

காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விதான் சவுதாவை பார்க்க அனுமதி அளிக்கப்படும். விதான்சவுதா கேட் 3லிருந்து, சுற்றுலா பயணியர் உள்ளே சென்று, விதான் சவுதாவின் அழகை ரசிக்கலாம். 30 பேர் கொண்ட குழுவாக சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவுடனும், டூர் கைடு மற்றும் டூரிஸ்ட் மித்ரா இருப்பர்.

சுற்றுலா பயணியர் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம். விதான்சவுதா கட்டடம், பூங்காக்கள், உருவச்சிலைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். துாய்மையை கடைபிடிக்க வேண்டும். விதான்சவுதாவை பார்க்க வரும் சுற்றுலா பயணியர், ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றிப் பார்க்க செல்லும்போது, குடிநீரை தவிர உணவோ, சிற்றுண்டியோ கொண்டு செல்ல கூடாது. பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை, மேல்சபை ஹால், மாநாடு ஹால், அன்றைய பிரதமர் நேரு பொருத்திய விதான்சவுதா பவுன்டேஷன் ஸ்டோன், காந்தி சிலை, அம்பேத்கர் சிலை உட்பட, மற்ற தலைவர்களின் உருவச்சிலைகளை பார்க்கலாம்.

சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது, சுற்றுலா பயணியருக்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement