முகவரியை தவறாக கூறியதால் தகராறு வாடிக்கையாளர் மைத்துனர் மீது தாக்குதல்

பசவேஸ்வராநகர்: வீட்டின் முகவரியை தவறாக கூறியதால் ஏற்பட்ட தகராறில், வாடிக்கையாளரின் மைத்துனரை தாக்கிய தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு, பசவேஸ்வரநகரில் வசிப்பவர் ஷஷாங்க், 35. தனியார் நிறுவன ஊழியர். இவரது மைத்துனியான 28 வயது இளம்பெண் கடந்த 21ம் தேதி 'ஜெப்டோ'வில் காய்கறி ஆர்டர் செய்திருந்தார்.

வீட்டின் முகவரியை தவறாக கொடுத்துவிட்டார். காய்கறியை டெலிவரி செய்ய, ஸ்கூட்டரில் விற்பனை பிரதிநிதி விஷ்ணுவர்த்தன், 27, வந்தார். முகவரி தவறாக இருந்ததால் சுற்றித்திரிந்தார். ஒரு வழியாக வீட்டை கண்டுபிடித்தார். காய்கறியை வாங்கியபோது ஷஷாங்கின் மைத்துனியை, விஷ்ணுவர்தன் திட்டியுள்ளார்.

இதை கவனித்த ஷஷாங்க், மைத்துனியை திட்டிய விற்பனை பிரதிநிதியை திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பொறுமை இழந்த விற்பனை பிரதிநிதி, பைக்கை நிறுத்தி கீழே இறங்கினார்.

ஷஷாங்கை பிடித்து தள்ளி அவரை தாக்கியதுடன், சரமாரியாக குத்திவிட்டுத் தப்பினார்.

கண்ணில் காயமடைந்ததால் பார்வையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக ஷஷாங்க் கூறி உள்ளார். விஷ்ணுவர்த்தன் மீது பசவேஸ்வராநகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடிவருகின்றனர்.

தாக்குதல் காட்சி, ஷஷாங்க் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

Advertisement