மத்திய அரசை விலக்கி, பகைத்து நிற்க முடியாது ஸ்டாலினுக்கு திருமாவளவன் 'புல் சப்போர்ட்'

5

சென்னை: ''நிடி ஆயோக் கூட்டத்தை விலக்கி, பகைத்து நிற்க முடியாது. மத்திய அரசை சார்ந்து இயங்குவதுதான், மாநில அரசின் அடிப்படையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய கசப்பான உண்மை,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு, வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

பின், திருமாவளவன் அளித்த பேட்டி:

மடை மாற்றும் முயற்சி



சிவகங்கை மாவட்டம், கீழடி ஆராய்ச்சி தரவுகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், பா.ஜ., அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது.

வரலாற்று உண்மையை நெடுங்காலமாக மறைக்க முடியாது. அதிகாரத்தை பயன்படுத்தி, தற்காலிகமாக மறைக்கவோ, திரிக்கவோ செய்ய முடியும். ஆனால், உண்மை வலிமையானது; உரிய நேரத்தில் வெளிப்படும்.

'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா வெளியே வருவார்' என, நையாண்டியாகத்தான், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்; கோரிக்கையாகவோ, அழைப்பாகவோ விடுவிக்கவில்லை. தமிழ்த்தேசியம் பேசாமல், தி.மு.க.,வை விமர்சிப்பதையே முக்கிய வேலையாக சீமான் வைத்திருப்பதன் வாயிலாக, தமிழ்த்தேசியம் என்பதை, இந்திய தேசியத்திற்கு முற்றாக மடை மாற்றும் முயற்சிதான்.

மத்திய அரசின், 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது, எதிர்ப்பை தெரிவிப்பதற்காகத்தான், அதற்காக தொடர்ந்து அதையே கடைபிடிக்க வேண்டும் என்பது, கட்டாயம் அல்ல. இந்த முறை, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி நிலுவையில் வைத்துள்ளீர்கள் என, சண்டையிடுவது நல்லது.

கசப்பான உண்மை



மாநில அரசு முற்றாக, அந்த கூட்டத்தை விலக்கி, பகைத்து நிற்க முடியாது. மத்திய அரசை சார்ந்து இயங்குவதுதான், மாநில அரசுக்கும் நல்லது. இதுதான், அடிப்படையான உண்மை. அது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மையும்கூட.

ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகள் புறக்கணித்தால், நஷ்டம் நமக்கு தான். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த, இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று இருக்கலாம். கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது, மக்கள் விரோத அணுகுமுறை.

மிருக பலத்தோடு மத்தியில் பா.ஜ., ஆட்சியில் இருந்தால், என்னவெல்லாம் செய்து இருக்கும் என்பதற்கு, இதுவும் ஒரு சான்று. மக்கள்தான், அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement