தலைவனாக செயல்படுவேன் பா.ம.க., அன்புமணி உறுதி

பாப்பிரெட்டிப்பட்டி: நான் உறுதிமிக்க தலைவனாக செயல் படுவேன் என பா.ம.க., தலைவர் அன்புணி கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கடத்துாரில் கட்சி பிரமுகர் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:

கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல்; துாக்கம் வரவில்லை. நாம் என்ன தவறு செய்தோம்; எதற்காக நமக்கு இந்த தண்டனை என எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன்.

என் கடமை



எதற்காக நான் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டேன் என, இதுவரை எனக்கு புலப்படவில்லை.

ஆனால், என் நோக்கம், என் லட்சியம், என் கனவு எல்லாமே, நிறுவனர் ராமதாஸ் அய்யாவின் கனவு. ஐயாவுடைய லட்சியத்தை நிறைவேற்றி உள்ளேன். இனியும், ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக ஐயாவின் கனவுகளை நிறைவேற்றுவேன். அது என் கடமை.

தமிழகத்தில் வன்னிய சமுதாயம் மிகப்பெரியது. ஆனால், எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறவில்லை. இந்த சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும்.

கேரளாவில் ஈழவ சமுதாயம் தான், பெரிய சமுதாயம். அங்கு, அவர்களுக்கு 14 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தின் பெரிய சமூகமான வன்னியர் சமூகத்துக்குரிய இட ஒதுக்கீடு அளிக்காமல் ஏமாற்றுகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற வகை பிரிக்கப்பட்டு, 36 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து இட ஒதுக்கீடு பெறும் வன்னியர் சமூகத்தின் சார்பில், ஒரே ஒரு வன்னியர் மட்டும்தான், போலீஸ் துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.

இதுதான் சமூக நீதி என்றால், அதை எப்படி ஏற்பது? இதற்காகத்தான், வன்னியர்களுக்குரிய இட ஒதுக்கீடான 10.5 சதவீதத்தை முறையாக வழங்குங்கள் என கேட்கிறோம்.

இலக்கை நோக்கி



இட ஒதுக்கீட்டுக்காக, முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி, ஸ்டாலின் என எல்லாரிடமும் கெஞ்சினோம்; கவர்னராக இருந்த அலெக்சாண்டரிடமும் கெஞ்சினோம்.

பா.ம.க.,வுக்கான பெரிய வெற்றி 2026ல் கிடைக்கப்போகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான், நாம் நினைத்த இலக்கை அடைய முடியும். அதற்கான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்; அதை இம்முறை, பா.ம.க., தலைவராக இருந்து சரியாக செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement