கொரோனா பரவல் அதிகரிப்பு: மருத்துவமனைகளுக்கு உஷார்

புதுடில்லி: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, புதிய உருமாறிய கொரோனாவும் தென்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, பல மாநிலங்களில் கடந்த ஏப்., மாதத்தில் இருந்து திடீரென உயர்ந்து வருகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டில்லியில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.

இதற்கிடையே, கொரோனாவின் புதிய உருமாறிய, என்.பி., - 1.8.1 மற்றும் எல்.எப்., - 7 வகைகள் தென்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மாதம், என்.பி., - 1.8.1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருந்தது, பரிசோதனையில் தெரிய வந்தது. அதே நேரத்தில், குஜராத்தில் நான்கு பேருக்கு, எல்.எப்., - 7 வகை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பாதிப்பு ஏற்படாது



இந்த புதிய வகைகளே, ஆசிய நாடுகளில் கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வதற்கு காரணமாக இருந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'இன்சகாக்' எனப்படும் இந்திய கொரோனா பகுப்பாய்வு கூட்டமைப்பு தகவலின்படி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டில்லியில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

டில்லியில், புதிதாக, 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில், 24 மணி நேரத்தில் நான்கு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகாவின் பெங்களூரில் தலா ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேரளாவில், மே மாதத்தில் மட்டும், 273 பேருக்கு தொற்று உறுதியானது.

முன்னெச்சரிக்கை



இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை இந்த மாநிலங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. உத்தராகண்ட் அரசும் தடுப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனைகளையும் அதிகரித்துள்ளது.

நிலைமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போது பாதிப்புகள் உயர்ந்து வந்தாலும், அச்சப்படும் அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கைகளை சுத்தப்படுத்துவது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில், ஜே.என்., - 1 வகை பாதிப்பே அதிகமாக உள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில், 53 சதவீதம் பேருக்கு இந்த வகை பாதிப்பு உள்ளது.

இந்த வகை தொற்று வேகமாக பரவினாலும், பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement