உலக அழகி போட்டியில் வெளியேறிய பிரிட்டன் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

12

லண்டன்: 'உலக அழகிப் போட்டியில் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக அழகிகளை நடத்திய விதம், விபசாரியை போல உணர வைத்தது' என, போட்டியில் இருந்து வெளியேறிய பிரிட்டன் அழகி மில்லா மாகி ஆவேசமாக தெரிவித்தார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று அடுத்த வாரம் நடக்கிறது.

தனிப்பட்ட காரணம்



இந்த நிகழ்ச்சி, 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க, பல்வேறு நாடுகளில் இருந்தும் அழகிகள் வந்துள்ளனர்.

பிரிட்டன் சார்பாக உலக அழகிப் போட்டியில் பங்கேற்க வந்திருந்த மில்லா மாகி, 24, தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கடந்த 16ல் அறிவித்தார்.

உலக அழகிப் போட்டியின் 74 ஆண்டு வரலாற்றில், இதுபோன்று ஒரு போட்டியாளர், பாதியில் வெளியேறுவது இதுவே முதல் முறை.

மில்லா மாகி வெளியேறியதையடுத்து, 'மிஸ் இங்கிலாந்து 2024' போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த, சார்லோட் கிரான்ட், 25, பிரிட்டன் சார்பில், உலக அழகி போட்டியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், லண்டன் திரும்பிய மில்லா மாகி, அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், போட்டியில் இருந்து வெளியேறியதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:

உலக அழகி போட்டிக்கு நிதி உதவி அளிக்கும் பெரும் பணக்காரர்களை வசீகரிக்கும் வகையில், காலையில் இருந்து இரவு வரை அதிக ஒப்பனை, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டோம்.

மரியாதைக்குறைவு



ஆறு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மேஜையிலும் இரண்டு பெண்கள், கட்டாயமாக அமர வைக்கப்பட்டனர்.

அதை, என்னால் நம்ப முடியவில்லை; அவர்களின் பொழுதுபோக்குக்காக நான் வரவில்லை. அவர்களின் செயல்கள் வாயிலாக, என்னை ஒரு விபசாரியைப் போல உணர வைத்தனர்.

அவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தைக்காட்டும் குரங்குகளைப் போல அமர்ந்திருந்தோம். என்னால், அதைத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் சிறிய நிகழ்வுகள் தான்.

உண்மையில் எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தனர் என்பது மரியாதைக் குறைவாக அவர்கள் நடந்துகொண்ட விதமே காட்டிக் கொடுத்தது.

உலக அழகி என்ற பட்டத்துக்கென தனி மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பழைய காலத்திலேயே சிக்கிக் கிடக்கிறது.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் குரலை பயன்படுத்தும்போது, உலகில் உள்ள அனைத்து கிரீடங்களும் ஒன்றுமே கிடையாது. எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் வெளியேறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement