ஆயுதப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு

3

புதுடில்லி: மத்திய ஆயுதப் படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு, உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை, ஆறு மாதத்திற்குள் எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- - திபெத் எல்லை காவல் படை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு, 2021ம் ஆண்டு முதல் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

நேரடி பணியமர்த்தல்



பதவி இடங்களை மறு ஆய்வு செய்யவும், பதவி உயர்வு கோரியும், வீரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மத்திய ஆயுதப்படைகளில் உயர் பதவிகள் என்பது பெரும்பாலும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் நேரடி பணியமர்த்தல் வாயிலாக நிரப்பப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனால், பல ஆண்டுகளில் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லாமல், ஒரு தேக்கநிலை நீடிப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்த அமர்வு கூறியுள்ளதாவது:

நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை பராமரிப்பதற்கும், உள்பாதுகாப்பு கடமைகளை செய்வதற்கும் மத்திய ஆயுதப்படை வீரர்களின் பங்கு மிக முக்கியமானது.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநிறுத்தும் அவர்களின் அர்ப்பணிப்பு சேவையை புறக்கணிக்க முடியாது. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அவர்கள் தங்கள் கடமைகளை செய்கின்றனர்.

ஆள்சேர்ப்பு



ஆனால், ஒரு சில பிரச்னைகள் காரணமாக, அவர்களால் சரியான நேரத்தில் பதவி உயர்வு பெற முடியவில்லை என்பது அவர்களது குறையாக உள்ளது. இதன் விளைவாக, பெரும் தேக்கநிலை நிலவுகிறது. இது, படைகளின் மன உறுதியை மோசமாக பாதிக்கும்.

இதனால், 2021ல் நடைபெறவிருந்த பணியாளர் மறு ஆய்வை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள சேவை மற்றும் ஆள்சேர்ப்பு விதிகளை திருத்தியமைப்பது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஆலோசனை பெற்று, மூன்று மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement