வடகிழக்கு மாநாட்டின் மூலம் ரூ.4.3 லட்சம் கோடி முதலீடுகள்; மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல்

புதுடில்லி: வடகிழக்கு மாநில மாநாட்டில் ரூ.4.3 லட்சம் கோடி முதலீடுகளுக்கான முன்மொழிவுகள் வந்துள்ளதாக வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநில முதலீட்டாளர் மாநாடு கடந்த இரு தினங்களாக டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுலா துறையின் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்த பிரதமர் மோடி, எரிசக்தி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளிலும் இம்மாநிலங்கள் முக்கிய மையமாக உருவெடுத்து வருவதாக கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் அதானி குழுமம் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். அதேபோல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் என்றும், வேதாந்தா குழுமம் ரூ.80,000 கோடி முதலீடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு மாநில மாநாட்டில் ரூ.4.3 லட்சம் கோடி முதலீடுகளுக்கான முன்மொழிவுகள் வந்துள்ளதாக வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; விவசாயம், விளையாட்டு, சுற்றுலா, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஜவுளி, கைவினைப் பொருட்கள், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் எட்டு உயர்மட்ட பணிக்குழுக்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களும் சொந்த திட்டங்களை உருவாக்க அனுமதியளிக்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய வருமாறு, பல்வேறு தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன் விளைவாக ரூ.4.30 லட்சம் கோடி முதலீடுகளுக்கு முன்மொழிவுகள் வந்துள்ளன.
இந்த உச்சிமாநாட்டின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் அடுத்த பொருளாதார சக்தியாக மாறுவதற்கான களத்தை அமைத்துள்ளது, எனக் கூறினார்.