கோல்கட்டா அணி ஏமாற்றம்: சதம் விளாசினார் கிளாசன்

டில்லி: பிரிமியர் லீக் போட்டியில் ஏமாற்றிய கோல்கட்டா அணி 110 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிளாசன் சதம் விளாசினார்.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில், ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஹெட் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய அபிஷேக், நோர்க்கியா வீசிய 2, 5வது ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார். வைபவ் அரோரா பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்ட ஹெட், ஹர்ஷித் ராணா ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் ஐதராபாத் அணி 79/0 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து அசத்திய அபிஷேக், சுனில் நரைன் வீசிய 7வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது நரைன் 'சுழலில்' அபிஷேக் (32) சிக்கினார்.
கிளாசன் விளாசல்: வருண் சக்ரவர்த்தி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹெட், நடப்பு சீசனில் 3வது அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கிளாசன், வருண் வீசிய 10வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். ஹர்ஷித் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட கிளாசன், 17 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது நரைன் பந்தில் ஹெட் (76 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். நரைன் பந்தை கிளாசன் சிக்சருக்கு அனுப்ப, ஐதராபாத் அணி 14.4 ஓவரில் 200 ரன்னை கடந்தது.
அடுத்து வந்த இஷான் கிஷான் (29) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கிளாசன், பிரிமியர் லீக் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்தது. கிளாசன் (105), அனிகேத் வர்மா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரசல் ஏமாற்றம்: கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (31) ஆறுதல் தந்தார். குயின்டன் டி காக் (9), கேப்டன் அஜின்கியா ரகானே (15), அங்கிரிஷ் ரகுவன்ஷி (14) நிலைக்கவில்லை. ஹர்ஷ் துபே 'சுழலில்' ரிங்கு சிங் (9), ரசல் (0), ராமன்தீப் சிங் (13) சிக்கினர். கோல்கட்டா அணி 7 விக்கெட்டுக்கு, 110 ரன் எடுத்து திணறியது.
பின் இணைந்த மணிஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா ஜோடி ஓரளவு கைகொடுத்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது உனத்கட் பந்தில் மணிஷ் (37) அவுட்டானார். வைபவ் அரோரா (0) 'ரன்-அவுட்' ஆனார். எஷான் மலிங்கா பந்தில் ஹர்ஷித் (34) ஆட்டமிழந்தார். கோல்கட்டா அணி 18.4 ஓவரில் 168 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.
மூன்றாவது இடம்
பிரிமியர் லீக் அரங்கில் அதிவேக சதம் (37 பந்து) விளாசிய வீரர்கள் வரிசையில் 3வது இடத்தை யூசுப் பதானுடன் (ராஜஸ்தான், 2010, எதிர்: மும்பை) பகிர்ந்து கொண்டார் கிளாசன். முதலிரண்டு இடங்களில் கெய்ல் (பெங்களூரு, 30 பந்து, 2013, எதிர்: புனே), வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான், 35 பந்து, 2025, எதிர்: குஜராத்) உள்ளனர்.
* 278 ரன் குவித்த ஐதராபாத் அணி, பிரிமியர் லீக் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களிலும் ஐதராபாத் அணி (287/3, எதிர்: பெங்களூரு, 2024 மற்றும் 286/6, எதிர்: ராஜஸ்தான், 2025) உள்ளது.
ஐந்து முறை
ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில், அதிக முறை ஒரு இன்னிங்சில் 250 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 5 முறை (287, 286, 278, 277, 266) இப்படி ரன் எடுத்தது. இரண்டாவது இடத்தை இந்தியா (297, 283, 260), சர்ரே (258, 252, 250) அணிகள் (தலா 3 முறை) பகிர்ந்து கொண்டுள்ளன
மேலும்
-
நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
-
கோடை வெயிலால் மாதாந்திர மின்தடை ரத்து
-
ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்க மாநில மாநாடு
-
சாலையில் மண் அரிப்பு; தடுப்பு சுவர் தேவை
-
கோவில் திருவிழாவில் தகராறு இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
ரூ.1.26 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி குளித்தலை எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு