இரண்டாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் கமிலா ரகிமோவா மோதினர். அபாரமாக ஆடிய சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-1 என துருக்கியின் ஜெய்னெப் சோன்மெசை வென்றார். மற்றொரு முதல் சுற்றில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா 4-6, 3-6 என்ற கணக்கில் சீனாவின் கின்வென் ஜெங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 6-3, 0-6, 4-6 என சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக்கிடம் தோல்வியடைந்து ஏமாற்றினார்.


மற்றொரு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் 6-4, 6-4 என இத்தாலியின் லுக்ரேசியா ஸ்டெபானினியை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், டென்மார்க்கின் எல்மர் மோலர் மோதினர். இதில் டாமி பால் 6-7, 6-2, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement