வெற்றியுடன் விடைபெற்ற சென்னை: வீழ்ந்தது குஜராத் அணி

ஆமதாபாத்: பிரிமியர் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி, 83 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் (பகலிரவு) சென்னை, குஜராத் அணிகள் மோதின. ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த சென்னை அணி, இளம் வீரர்களின் திறமையை சோதிக்கும் இலக்குடன் களமிறங்கியது. வெயில் கொளுத்தியதால், 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, சாமர்த்தியமாக 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆயுஷ் மாத்ரே அதிரடி: சென்னை அணிக்கு இளம் ஆயுஷ் மாத்ரே, கான்வே அதிரடி துவக்கம் தந்தனர். அர்ஷத் கான் ஓவரில் (2வது) மாத்ரே, 28 ரன் (2,6,6,4,4,6) விளாசினார். சிராஜ் ஓவரில் கான்வே 2 பவுண்டரி அடிக்க, 3 ஓவரில் 44 ரன் எடுக்கப்பட்டன. பிரசித் கிருஷ்ணா பந்தில் மாத்ரே (34, 3X4, 3X6) அவுட்டானார். அடுத்து, உர்வில் படேல் விளாச, ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. 'பவர்பிளே' முடிவில் (முதல் 6 ஓவர்) 68/1 ரன் எடுத்தது. சாய் கிஷோர் வலையில் உர்வில் (37, 4X4, 2X6) சிக்கினார். ஷிவம் துபே, 17 ரன் எடுத்தார். அரைசதம் கடந்த கான்வே (52, 6X4, 2X6), ரஷித் கான் பந்தில் போல்டானார்.
பிரவிஸ் விளாசல்: 'பேபி டிவிலியர்ஸ்' என செல்லமாக அழைக்கப்படும் பிரவிஸ் மிரட்டினார். சிராஜ் ஓவரில் வரிசையாக 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். 19 பந்தில் அரைசதம் எட்டிய பிரவிஸ், 57 ரன்னுக்கு (4x4, 5x6) அவுட்டானார். தோனிக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை அணி 20 ஓவரில் 230/5 ரன் குவித்தது. ஜடேஜா (21) அவுட்டாகாமல் இருந்தார்.
கம்போஜ் கலக்கல்: கடின இலக்கை விரட்டிய குஜராத் அணி, சென்னையின் அபார பந்துவீச்சில் சிதறியது. முதல் ஓவரை வீசிய ஜடேஜா 7 ரன் மட்டும் கொடுத்தார். கம்போஜ் 'வேகத்தில்' கேப்டன் சுப்மன் கில் (13) நடையை கட்டினார். பட்லர் (5), ரூதர்போர்டு (0) ஏமாற்றினர். 5 ஓவரில் 30/3 ரன் எடுத்து தவித்தது. ஜடேஜாவின் ஒரே ஓவரில் (11வது) ஷாருக் கான் (19), சுதர்சன் (41) அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஷித் கான் (12), டிவாட்யா (14) நிலைக்கவில்லை. குஜராத் அணி 18.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதனால், ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை பெற்ற குஜராத் அணிக்கு 'டாப்-2' இடம் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்டநாயகன் விருதை பிரவிஸ் வென்றார்.
அதிவேக அரைசதம்
சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தை மொயீன் அலி (எதிர், ராஜஸ்தான், 2022), ரகானே (எதிர், மும்பை, 2023) உடன் பிரவிஸ் பகிர்ந்து கொண்டார். மூவரும் 19 பந்தில் எட்டினர். முதலிடத்தில் ரெய்னா (16 பந்து, எதிர், பஞ்சாப், 2014) உள்ளார்.
கடைசி இடம்
குஜராத் அணியை 121 ரன் அல்லது அதற்கு கீழ் சுருட்டியிருந்தால், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 9வது இடம் பிடித்திருக்கும். இதை செய்யத்தவறியதால் கடைசி இடம் (10வது) பெற்றது. இதற்கு முன், 2022ல் 9வது இடம் பிடித்திருந்தது. கடந்த 2020ல் 8 அணிகள் பங்கேற்ற தொடரில் 7வது இடம் பெற்றது.
ஐந்து முறை (2010, 2011, 2018, 2021, 2023) கோப்பை வென்ற சென்னை அணி, 5 முறை (2008, 2012, 2013, 2015, 2019) பைனல் வரை சென்றது. இரண்டு முறை (2009ல் அரையிறுதி, 2014ல் தகுதிச் சுற்று-2) 'பிளே-ஆப்' சுற்று வரை சென்ற சென்னை அணி, 4 முறை (2020ல் 7வது, 2022ல் 9வது, 2024ல் 5வது, 2025ல் 10வது இடம்) லீக் சுற்றோடு திரும்பியது. சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை அணிக்கு 2 ஆண்டு (2016, 2017) தடை விதிக்கப்பட்டிருந்தது.
* இம்முறை அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் நுார் அகமது (ஆப்கன்) முதலிடத்தில் உள்ளார். இதுவரை 24 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இது சிறந்தது
பிரிமியர் லீக் அரங்கில், குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன் (83) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை. அடுத்த இரு இடங்களில் சென்னை (63 ரன், 2024), லக்னோ (33 ரன், 2024) அணிகள் உள்ளன.